தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக டாக்டர் மோனிகா ராணா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு நிர்வாக காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணா தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையை மோனிகா ராணா பெற்றுள்ளார். முன்னதாக தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரஞ்ஜீத் சிங், ஐஏஎஸ் மாற்றப்பட்டு தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றிய டாக்டர் மோனிகா ராணா, ஐஏஎஸ் (Dr. Monika Rana, IAS), தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் 2018-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். மேலும், இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி (MBBS) என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் உள்ள எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்றுள்ளார்.
சார் ஆட்சியராக சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னர், மலைப்பகுதி மற்றும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டங்களின் கீழ் திட்ட இயக்குநராகவும், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநராகவும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராகவும் பணிபுரிந்து உள்ளார். தற்போது தென்காசி மாவட்டத்தில் எட்டாவது புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா அவரது பணி சிறக்க கீழை நியூஸ் மற்றும் சத்தியப்பாதை செய்தி குழுமம் சார்பில் வாழ்த்துகிறோம்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.