22 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிறந்த 5 நாட்களிலேயே பச்சிளங்குழந்தை உயிரிழப்பு!

பிறந்த 5 நாட்களிலேயே பச்சிளங்குழந்தை உயிரிழப்பு!

எழுதியவர்: Baker BAker October 22, 2026, 10:56 am

என் குழந்தைக்கு ஏன் இந்த நிலை?” — மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுத தாய்; மருத்துவர்கள் மீது அலட்சியப் புகார்!

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த ஐந்தே நாட்களில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் எனப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த அசாருதீனின் மனைவி நூருல் ஆசிகா, பிரசவத்திற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், நேற்று மாலை குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தாயும் உறவினர்களும் குழந்தைகள் வார்டு முன்பு கண்ணீர்விட்டு கதறி அழுதனர். மருத்துவமனை வளாகமே சோகத்தில் மூழ்கியது.

குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டிய பெற்றோர், குழந்தையின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

எஸ்.பி. பட்டினத்தைச் சேர்ந்த குழந்தையின் தாத்தா சேக் முகமது ராவுத்தர் கூறுகையில், குழந்தையின் உயிரிழப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை எனத் தெரிவித்ததாகக் குற்றம்சாட்டினார். குழந்தைக்குப் பால் கொடுத்தபோது புரையேறியிருக்கலாம் அல்லது மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை உரிய மருத்துவ விசாரணை மூலம் தெளிவுபடுத்த வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்துகின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவு செய்து சிகிச்சை பெற முடியாத ஏழை, எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளே முக்கிய ஆதாரமாக உள்ளன. இந்நிலையில், பச்சிளங்குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் குறித்துப் புகார் எழுந்திருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றால் எங்களைப் போன்ற ஏழை மக்கள் எங்கே செல்வது?” என்ற வேதனையான கேள்வியை எழுப்பியுள்ள உறவினர்கள், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, குழந்தையின் உயிரிழப்பு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.

பச்சிளங்குழந்தைகளுக்கான அவசரச் சிகிச்சை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பரிசோதனை வசதிகள் போதுமான அளவில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், பச்சிளங்குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பத்தின் துயரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய விதிமுறைகளின்படி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!