திருவாடானை ஓரியூர் விலக்கில் சாலை மறியல் –
சிறு, குறு விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல் – போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!
இராமநாதபுர மாவட்டம் திருவாடானையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்யக் கோரி, இடதுசாரி விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் திருவாடானை ஓரியூர் விலக்கு பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் முத்துராமு தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சிறு, குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பெரிய விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகள் எதிர்கொள்ளும் கடன் சுமையைக் குறைத்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விவசாயிகளின் மற்றொரு முக்கியக் கோரிக்கையாக, மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறையினர், தனியார் வாகனம் மூலம் அழைத்துச் சென்று தனியார் மஹாலில் தங்கவைத்தனர்.
விவசாயிகளின் பயிர்க்கடன் சுமை, விவசாயச் செலவுகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய அவசியம் அதிகரித்துள்ள நிலையில், பயிர்க்கடன் தள்ளுபடி கோரிக்கைக்கு தமிழக அரசு உரிய பதிலளிக்குமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக உள்ளது .




You must be logged in to post a comment.