சாயல்குடி–வாலிநோக்கம் வழித்தடம் வழியாக அரசுப் பேருந்துகள் முன்கூட்டியே புறப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைவதாகவும் வெற்றி பயணத்தால் எந்த பயனும் இல்லை என பயணிகளிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே புறப்படுவதால்,
பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் தினமும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாயல்குடியில் இருந்து ஒப்பிலான், மாரியூர், முந்தல் வழியாக வாலிநோக்கம் செல்லும் வெற்றிப் பயண அரசுப் பேருந்துகள், குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படாமல்,
அரை மணி நேரத்திற்கு முன்பே புறப்படுவதாகப் பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மாலை நேரங்களில் பள்ளிகள் முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகளும், வேலை முடிந்து திரும்பும் பெண்களும் இத்தகைய அரசுப் பேருந்துகளையே பெரிதும் நம்பி உள்ளனர்.
ஆனால், பேருந்துகள் முன்கூட்டியே புறப்படுவதன் காரணமாக, உரிய நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள்
பேருந்தைத் தவறவிட்டு நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை தொடர்கிறது.
பெண்களின் பயணச் சுமையைக் குறைத்து, அவர்களின் பொருளாதாரச் சுமையைத் தாங்கும் நோக்கில்
தமிழ்நாடு அரசு இத்தகைய இலவசப் பயணத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும், இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் முறையான நேரக் அட்டவணையைப் பின்பற்றி
இயக்கப்படுவதை உறுதி செய்வது போக்குவரத்துத் துறையின் முதற்கடமையாகும்.
”இலவசப் பயணத் திட்டம் என்பதால் பயணிகளின் சிரமங்கள் மற்றும் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுகிறதா?” என்ற நியாயமான கேள்வி இப்போது அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டாலும், போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் நேரத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைப்படியே பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத் துறை உறுதிப்படுத்த வேண்டும்.
பொதுமக்களின் தொடர் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி,
மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு தவறிழைப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.