21 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 நாள் ஆண் குழந்தை உயிரிழப்பு!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 நாள் ஆண் குழந்தை உயிரிழப்பு!

எழுதியவர்: Baker BAker October 21, 2026, 9:37 pm

மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியமே காரணம் எனப் பெற்றோர் குற்றச்சாட்டு – உரிய விசாரணைக்கு வலியுறுத்தல்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து ஐந்து நாட்களே ஆன ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியமே குழந்தையின் உயிரிழப்புக்குக் காரணம் எனப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த அசாருதீனின் மனைவி நூருல் ஆசிகா, பிரசவத்திற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி, குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் நூருல் ஆசிகா மற்றும் உறவினர்கள், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு முன்பு கதறி அழுதனர். குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவப் பணியாளர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றம்சாட்டிய அவர்கள், உயிரிழப்புக்கான காரணத்தைத் தெரிவிக்கக் கோரி குழந்தையின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு விசாரணை நடத்துமா?

பிறந்து ஐந்து நாட்களே ஆன பச்சிளங்குழந்தை உயிரிழந்ததற்கான உண்மையான காரணம் என்ன? சிகிச்சையில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டதா? என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகமும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏழை, எளிய மக்கள் நம்பியிருக்கும் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வருவதுடன், தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!