தேவர்குளம் அரசு பள்ளியில் விதைப் பந்துகளை உருவாக்கிய மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலிருந்து விதைப்பந்து புரட்சியை ஏற்படுத்தி வரும் சமூக ஆர்வலர் பூ.திருமாறன் பாராட்டு சான்றுகளை வழங்கி கெளரவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விதைப்பந்துகள் செய்து குவித்த மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை பிராங்க்ளின் லூர்து செல்வராணி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியை எபநேசர் முத்து செல்வி மற்றும் கணித ஆசிரியை மேரி பாப்பா முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில், பள்ளியில் பயிலும் மாணாக்கர் ஒருவருக்கு 25 விதைப் பந்துகள் வீதம் சுமார் 4000 விதைப் பந்துகளை செய்து குவித்து வைத்தனர். வேம்பு, புளி, தேக்கு, எலுமிச்சை, நாவல், நெல்லி, பேரிச்சை விதைகளை உள்ளடக்கிய விதைப் பந்துகளை பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் தயாரித்திருந்தனர்.

விதைப் பந்துகள் மூலம் பசுமை பாதுகாப்பு பணியை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். தலைமை ஆசிரியை செல்வராணிக்கு பசுமைப் போராளி விருதினை திருமாறன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் இரத்ததான கழக மணியன், அம்பை காந்தி தாசர், பல் மருத்துவர் முக்கூடல் ஏகலைவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தங்க பாண்டியன், ஆசிரியை ஞானமணி, தமிழாசிரியை ஜெயா, அறிவியல் ஆசிரியை செல்வி, ஆங்கில ஆசிரியை கே. தமிழ்ச்செல்வி செய்திருந்தனர். பள்ளி வளாகத்தில் தேக்கு மரக்கன்றினை மாணவர் செ.சுதீஷ் ராஜா, மாணவி மது நிஷா நடவு செய்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.