பனை மரங்களை பாதுகாக்க வேண்டும்; சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் — வீ தி லீடர்ஸ் அமைப்பு வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாடமுருகன் தலைமை வகித்தார். தரணி முருகேசன் முன்னிலை வகித்தார். கீழக்கரை வீதி லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த ராஜபிரபு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கூட்டத்தில் கனிராஜபுரம் முதல் சாயல்குடி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருப்பதாகவும் அதனை முறையாகப் பராமரித்து, அவற்றின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன், பனை சார்ந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
பனை மரங்கள் அழிந்து வரும் நிலையில் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பனை மரங்களை சட்டவிரோதமாக வெட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பனை மரப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் கீழக்கரை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் கழிவுநீர் நேரடியாக கடலில் கலப்பதால் கடல் வளங்களும், கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படுவதாக கூறப்பட்டது.
கீழக்கரையில் மதுபானக் கடைகள் இல்லாத நிலையிலும், நகரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாகவும் இதனை காவல்துறை தீவிரமாக கண்காணித்து முழுமையாக தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலை அடியோடு ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுக்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கூட்டத்தில் சூர சங்கர், ரத்தினம், ராமேஸ்வரம் கவுன்சிலர் சங்கர், வீரபாகு, முருகேசன், முருகன், ராஜா, மணிகண்டன், ரங்கன், வேலு, நாகராஜன், தாயம்மாள், வினோத், கண்ணன், கார்த்திக், விமல், சக்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.








You must be logged in to post a comment.