இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் வட்டம் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 538 மாணவ–மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் சுகாதாரப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கல்வி பயிலும் இப்பள்ளியில், போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததால் மாணவ–மாணவிகள் இயற்கை உபாதைகளை உரிய நேரத்தில் கழிக்க முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிக்க துப்புரவு பணியாளர் இல்லாததால், கழிப்பறைகளின் சுகாதார நிலை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் பள்ளி மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
“மாணவர்களுக்கு கல்வி மட்டும் போதாது; பாதுகாப்பான சுகாதார வசதியும் அவசியம்” என வலியுறுத்தியுள்ள பள்ளி மேலாண்மைக் குழு, இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளது.
மாணவர்களின் உடல்நலம் மற்றும் பள்ளி சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கழிப்பறை வசதிகளை உடனடியாக ஏற்படுத்துவதுடன், துப்புரவு பணியாளரை நியமிக்க மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களின் அடிப்படை வசதி என்ற கேள்விக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி தீர்வு அளிக்குமா? என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.




You must be logged in to post a comment.