ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு – கருட பகவான் வானில் வட்டமிட்டதால் பக்தர்கள் பரவசம்
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழாவையொட்டி காலையில் விநாயகர் பூஜை, அணுக்கை, புண்ணியாஹவாசனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் யாக பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராஜ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் ராமநாதபுரம் அரண்மனையைச் சேர்ந்த ராஜாராம் பட்டர் சாஸ்திரி தலைமையில் மூலவருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தி வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பத்தில் இருந்து புனித நீர் ஊற்றப்பட்டதை பக்தி பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர். அப்போது கருட பகவான் வானில் வட்டமிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், பக்தர்கள் குலவையிட்டு ஆரவாரம் செய்து பக்தி பரவசம் அடைந்தனர்.
விழாவில் தெற்கு காட்டூர், வழுதூர், வாலாந்தரவை, உடச்சியார்வலசை, அலியார்கடை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ மாரியம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.







You must be logged in to post a comment.