கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வாடகை வீடுகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் வசித்து வரும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
பலமுறை மனுக்கள் அளித்தும், மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் முறையிட்டும் வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். தகுதியுள்ள ஏழை, எளிய குடும்பங்களை முறையாகக் கள ஆய்வு செய்து, உடனடியாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த மாதங்களில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு போராட்டங்களில் ஈடுபட்ட பொழுது வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில், வீட்டுமனைப் பட்டா கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினரை மேட்டுப்பாளையம் காவல்துறையினர் கைது செய்து. மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய கோயில் அருகே உள்ள வியாபாரிகள் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ஏழை, எளிய மக்களின் நீண்டகால கனவான வீட்டுமனைப் பட்டா கோரிக்கைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், தகுதியான அனைவருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிஐடியு பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.




You must be logged in to post a comment.