சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு கார் வழங்குவது நிறுத்தப்பட்டு, தூய்மை காவலர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் (RSP) தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் தமிழக முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை: தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் பொதுமக்களின் சுகாதாரத்தையும் தூய்மையையும் பாதுகாக்கும் பணியில் தினந்தோறும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களின் வாழ்க்கை நிலையை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
மனிதக் கழிவுகள் உட்பட பல்வேறு வகையான கழிவுகளை அகற்றி, கிராமங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்களின் உழைப்பு அளப்பரியது. ஆனால், இவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியம் வெறும் ரூ.6,000 என்ற மிகக் குறைந்த தொகையாகவே உள்ளது. உடல்நிலை சரியில்லாமல் ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்தால் கூட ஊதியப் பிடித்தம் செய்யப்படும் நிலை இருப்பதாகத் தூய்மை காவலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு குடும்பத்தை நடத்துவதற்கே போதுமான வருமானம் இல்லாத நிலையில், விலைவாசி உயர்ந்து வரும் சூழலில், இத்தகைய சொற்ப ஊதியத்தில் இந்தத் தொழிலாளர்கள் எவ்வாறு வாழ முடியும்?
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் உள்ளிட்ட வசதிகளை வழங்குவது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் போது, கிராமங்களின் தூய்மைக்காக தங்களுடைய உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் உழைக்கும் தூய்மை காவலர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு ஏன் முன்னுரிமை அளிக்கக்கூடாது?
மக்களின் வரிப்பணத்தில் இருந்து செய்யப்படும் ஒவ்வொரு செலவும் மக்களின் நலனுக்காகவும், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் இருக்க வேண்டும் என்பதே மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு.
தூய்மை காவலர்களின் உழைப்பை மதியுங்கள்! அவர்களின் ஊதியத்தை உடனடியாக உயர்த்துங்கள்! ஊதியப் பிடித்தம் தொடர்பான நடைமுறையை மறுபரிசீலனை செய்யுங்கள்! மருத்துவம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! முதலமைச்சர் அவர்களே, முடிவெடுங்கள்!
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சொகுசு வசதிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, கிராமங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் தூய்மை காவலர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கே அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
தூய்மை காவலர்களின் குடும்பங்களும் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும். அவர்களின் உழைப்புக்கு உரிய ஊதியமும், அங்கீகாரமும் அளிக்க வேண்டும்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.