ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா மாவூர் ஊராட்சியில் அரசு சொத்து தொடர்பான புகார் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஊராட்சி செயலாளர் பொதுமக்களிடம் அதிகாரத் தொனியில் பேசியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர், தனது ஊராட்சியில் தாய் திட்டம் மூலம் வழங்கப்பட்ட 14-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் 5 மின்கம்பங்கள் தனிநபர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி செயலாளர் சண்முகத்திடம் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது. அவற்றை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், தொடர்ந்து தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்ற பார்த்திபனின் எண்ணை ஊராட்சி செயலாளர் ‘பிளாக்’ செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து நேரில் சென்று விளக்கம் கேட்டபோது, “எனக்குத் தேவையான நபர்களின் எண்களை மட்டும்தான் எடுப்பேன்”, “யார் எண்ணை பிளாக் செய்ய வேண்டும் என்பது என் இஷ்டம்”, “நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரன் இல்லை” என்று பேசியதாகக் கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, அரசு சொத்து தொடர்பான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காததோடு, புகார் அளிக்க வந்த பொதுமக்களிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொண்டதாக கூறப்படும் ஊராட்சி செயலாளர் மீது துறை ரீதியாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்




You must be logged in to post a comment.