திருவாடானை வட்டம், தோட்டாமங்கலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில்களின் ஆவணி மாதத் திருவிழாவை முன்னிட்டு ஏற்பட்டுள்ள சட்டம்–ஒழுங்கு பதற்றத்தைத் தொடர்ந்து, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 163(1)-ன் கீழ் இரண்டு மாதங்களுக்கு திருவிழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகம், ஆபரணங்கள் பராமரிப்பு மற்றும் பூசாரி நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக கிராம மக்கள் இரு பிரிவினராக கடுமையான கருத்து வேறுபாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
பலமுறை அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காததால், அப்பகுதியில் கலவரம் ஏற்படும் அபாயம் இருப்பதாக திருவாடானை காவல் ஆய்வாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், இராமநாதபுரம் உட்கோட்ட நிர்வாக நடுவரும் வருவாய் கோட்டாட்சியருமான ஹபிபுர் ரஹ்மான், 2026 ஆகஸ்ட் 21 முதல் இரண்டு மாதங்களுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில், கோவில் திருவிழா தொடர்பான ஊர்வலம், பொதுக் கூடல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் திருவாடானை காவல் ஆய்வாளர் வாசிவம் தலைமையில் ஏராளமான போலீசார் தோட்டாமங்கலம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசு நிர்வாகமும் காவல்துறையும் பொதுமக்கள் அமைதியை கடைப்பிடித்து, தடை உத்தரவை முழுமையாக பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றனர்




You must be logged in to post a comment.