இராமநாதபுரம் மாவட்டம் இதம்பாடல் கிராமத்தில் கண்மாய்க்கு வரும் நீர்வரத்தை தனியார் நிறுவனம் தடுப்பதாகக் குற்றம்சாட்டி, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் எழுத்துப்பூர்வமாக ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதம்பாடல் கிராமத்தில் சுமார் 3,000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழும் நிலையில், கிராமத்தின் முக்கிய நீராதாரமான கண்மாய்க்கு தண்ணீர் வரும் பாதையில் தனியார் நிறுவனம் சுமார் 10 அடி உயரத்தில் தடுப்புச்சுவர் அமைத்து நீர்வரத்தை தடுத்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த தடுப்புச்சுவரால் மழைக்காலங்களில் கிடைக்க வேண்டிய நீர்வரத்து பாதிக்கப்படுவதுடன், விவசாய நிலங்களுக்கான பாசன வசதி மற்றும் எதிர்கால குடிநீர் தேவையும் கடுமையாக பாதிக்கப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “கண்மாய்தான் எங்களது வாழ்வாதாரம். நீர்வரத்தை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை உடனடியாக அகற்ற வேண்டும். கண்மாயை முழுமையாக அளவீடு செய்து அதன் எல்லைகளை பாதுகாக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினர்.
சாலை மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அவசர தேவைக்காக பயணித்தவர்கள் மற்றும் வெளியூர் செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் சிரமத்தை சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அபிப்ரஹ்மான், கீழக்கரை உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் யுக பிரியா, கீழக்கரை தாசில்தார் ராமசுப்பிரமணியன் கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாபன் உத்திரகோசமங்கை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுந்தரி சிக்கல் காவல் ஆய்வாளர் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரி ஆகியோர் தலைமையில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கிராம மக்களின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.




You must be logged in to post a comment.