திருவாடானையில் சேதமடைந்த சாலைத் தடுப்புகளால் மீண்டும் உயிரிழப்பு அபாயம்; அதிகாரிகள் அலட்சியம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருச்சி–ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட பேரிகார்டுகள் (சாலைத் தடுப்புகள்) சேதமடைந்து சாலை ஓரங்களில் கிடப்பதால், அப்பகுதியில் மீண்டும் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பறையனேந்தல் பகுதியில் அடிக்கடி நிகழ்ந்த சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் பேரிகார்டுகளை அமைத்தது. ஆனால் தற்போது அவை உடைந்து அங்காங்கே சாலை ஓரங்களில் கிடப்பதால், அமைக்கப்பட்ட நோக்கமே கேள்விக்குறியாகியுள்ளது.
இதுமட்டுமல்லாமல், நகரிக்காத்தான் பகுதியில் அமைக்கப்பட்ட பேரிகார்டுகளும் பயன்படுத்தப்படாமல் சாலை ஓரத்தில் வீணாகக் கிடப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செயலிழந்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
விபத்துகளைத் தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புகளே சாலையோரத்தில் கிடக்கின்றன. அதிகாரிகள் விபத்து நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்களா?” என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் காவல்துறை உடனடியாக சேதமடைந்த பேரிகார்டுகளை சீரமைத்து, உரிய இடங்களில் மீண்டும் பொருத்துவதோடு, தேசிய நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வசதிகளை முழுமையாக ஆய்வு செய்து மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.