ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் கீழ் மண்டபம் வட்டார அட்மா திட்டத்தின் சார்பில், வேளாண் விஞ்ஞானிகள் – விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றன . ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குநர் வாசுகி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) மோனிஷா வரவேற்புரை ஆற்றி, மண்டபம் வட்டார விவசாயிகள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளை வரவேற்றார்.
இயற்கை வேளாண்மை முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மண்வளத்தைப் பாதுகாக்க முடியும் என்றும், ஊட்டமேற்றிய தொழு உரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என்றும் தெரிவித்தார். மேலும், விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் (Farmer ID) பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி, இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
முனைவர் ராமகிருஷ்ணன் தென்னைப் பயிரில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, உரமிடும் முறைகள் குறித்து விளக்கமளித்தார். முனைவர் ஜெகதீசன் நெற்பயிரைத் தாக்கும் பூச்சி, நோய் கட்டுப்பாடு, உயிர் உர விதை நேர்த்தி மற்றும் மண்புழு உரம் தயாரிப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
பயிர் காப்பீட்டுத் திட்ட வேளாண்மை உதவி இயக்குநர் கீதாஞ்சலி, மண் மாதிரி சேகரிப்பின் அவசியம் மற்றும் மண்புழு உரம் தயாரித்து பயன்படுத்துவதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சோனியா ஆகியோர் செய்திருந்தனர்




You must be logged in to post a comment.