23 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தீராத போக்குவரத்து நெரிசல்!

கீழக்கரையில் தீராத போக்குவரத்து நெரிசல்!

எழுதியவர்: Baker BAker August 20, 2026, 7:37 pm

பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை – அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் பொதுமக்கள் கடும் அதிருப்தி; போக்குவரத்து காவலர்களை உடனடியாக நியமிக்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலமுறை புகார்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் நிரந்தர தீர்வு காணாத அதிகாரிகளின் மெத்தனப் போக்கு மீது பொதுமக்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

கீழக்கரையின் முக்கிய சாலையான வள்ளல் சீதக்காதி சாலையில், சாலையின் இருபுறங்களிலும் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முறையின்றி நிறுத்தப்படுவதால் சாலை குறுகி வருகிறது. இதனால் அரசு பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் கூட சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்படுகிறது.

“புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகின்றனர்; ஆனால் நடவடிக்கை எப்போது?” என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், காவல்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பது பொதுமக்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

மேலும், கீழக்கரையில் முறையான போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என பல்வேறு இயக்கங்கள், சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த கோரிக்கை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் மெத்தனமாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“ஆட்சி மாறினாலும் அதிகாரிகளின் அணுகுமுறை மாறவில்லை; மக்களின் நிலை மட்டும் மாறாமல் தொடர்கிறது” என்ற அதிருப்தியும் கீழக்கரை மக்களிடையே அதிகரித்து வருகிறது.

போக்குவரத்து நெரிசல் என்பது வெறும் வாகன ஓட்டிகளின் பிரச்சினை மட்டுமல்ல. பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவை வாகனங்களுக்கும் இது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினையாகும்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இனியும் காலதாமதம் செய்யாமல் கீழக்கரையில் நிரந்தர போக்குவரத்து காவல் பிரிவை அமைத்து, போதிய எண்ணிக்கையில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தற்காலிகமாகவாவது காலை, மாலை மட்டுமின்றி இரவு நேரங்களிலும் முக்கிய சந்திப்புகள் மற்றும் வள்ளல் சீதக்காதி சாலையில் போக்குவரத்து காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, சாலை ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

மக்களின் உயிருக்கும், அவசரகால சேவைகளுக்கும் நேரடியாக தொடர்புடைய இந்த பிரச்சினையில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு தொடர்ந்தால், அடுத்த கட்டமாக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கும் சூழல் உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனியும் புகார்களை கிடப்பில் போடாமல், கீழக்கரையின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே தற்போது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!