ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டையன்வலசை உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி 200 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மொட்டையன்வலசை, ஆலாப்புளி, ஏந்தல், அருக்கண் வலசை, முனுசு வலசை, குமராண்டி வலசை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளுக்கு அரசு பேருந்து வசதி இல்லாததால், பொதுமக்கள் தினமும் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏந்தல் பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று, அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அவசர காலங்களிலும் போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மொட்டையன்வலசையைச் சேர்ந்த தமிழரசி கூறுகையில், “தரமான சாலை வசதி இருந்தும் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் கல்விக்காகவும், விவசாயிகள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் பெரும் சிரமம் அனுபவிக்கின்றனர். இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் முதியவர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை பாதுகாப்பு அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
எனவே, மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத் துறையும் உடனடியாக இப்பகுதிக்கு அரசு பேருந்து சேவையை இயக்க வேண்டும். இல்லையெனில், 200 குடும்பங்களும் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.