சுகாதார சீர்கேடு, குண்டும் குழியுமான சாலைகள் – சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு | வசூலிக்கப்படும் நிதி எங்கே செல்கிறது? என கேள்வி
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுற்றுலா பயணிகளிடம் கட்டணங்கள் மற்றும் பல்வேறு வகைகளில் வசூல் செய்யப்படும் நிலையில், அதற்கேற்ற அடிப்படை வசதிகள் ஏன் ஏற்படுத்தப்படவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
பழைய குற்றாலம் பகுதியில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாததால் சாலை சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியில் இதுபோன்ற நிலை தொடர்வது நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை உருவாக்குவதாகவும் சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், போதிய கழிப்பறை மற்றும் பிற அடிப்படை வசதிகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்வதில் காட்டப்படும் தீவிர கவனம், அந்த வருவாயை பயன்படுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் ஏன் காட்டப்படவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
“சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்யப்படும் நிதி எங்கே செல்கிறது? அந்த நிதியில் எவ்வளவு தொகை பழைய குற்றாலத்தின் சாலை, கழிப்பறை, தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்புக்கு செலவிடப்படுகிறது?” என்ற கேள்வியும் தற்போது வலுப்பெற்று வருகிறது.
வசூல் நடவடிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி, வசூலிக்கப்படும் தொகைகளுக்கான கணக்கு மற்றும் அதன் பயன்பாடு குறித்து முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிப்படை வசதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதற்கு காரணமான அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், கடமையில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது உரிய சட்டரீதியான மற்றும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பழைய குற்றாலத்தில் சாலை சீரமைப்பு, குப்பைகளை உடனடியாக அகற்றுதல், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
வசூல் செய்வதில் காட்டப்படும் வேகம், மக்கள் பயன்பெறும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதிலும் வெளிப்பட வேண்டும். வசூலிக்கப்படும் நிதியின் வரவு–செலவு குறித்து வெளிப்படையான கணக்கெடுப்பு நடத்தி, முறைகேடு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.









You must be logged in to post a comment.