இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அழைப்பின் பேரில், நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக, பரமக்குடி வருவாய்த்துறை அலுவலர்களும் அலுவலகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில், முதுநிலை வருவாய் வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், காலிப் பணியிடங்களில் பணியாற்றி வரும் அலுவலர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல், வருவாய்த்துறை அலுவலர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
சங்க நிர்வாகிகள் கூறுகையில், பல ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அலுவலர்கள் கடுமையான பணிச்சுமையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர். ஒரே அலுவலர் பல்வேறு பொறுப்புகளை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் பாதிக்கப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி, தகுதியான அலுவலர்களுக்கு காலமுறைப்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், வருவாய்த்துறையின் செயல்திறனை மேம்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சங்கத்தின் அறிவிப்பின் பேரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பங்கேற்றனர். அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், இந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பணி புறக்கணிப்பு காரணமாக, பட்டா மாற்றம், வருவாய் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்குதல், வருவாய் தொடர்பான மனுக்கள் பரிசீலனை உள்ளிட்ட அலுவலகப் பணிகளில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டது. வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து, சுமுகமான தீர்வை எட்ட வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது




You must be logged in to post a comment.