ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் பணி நியமனத்தில் அரசு விதிகளைப் பின்பற்றுதல், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்ட முழுவதும் அரசு பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பரமக்குடி வட்டாட்சியர் பணி நியமனத்தில் அரசு விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் மற்றும் 16 வருவாய்த்துறை அலுவலர்களுக்குத் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் சுமார் 540 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பட்டா மாறுதல், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பெற வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து வருவாய்த்துறை சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிக்குமார் தெரிவிக்கையில், “எங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாகத் தொடர் போராட்டங்களில் ஈடுபட நேரிடும்” என எச்சரித்துள்ளார்.










You must be logged in to post a comment.