நீண்டகால முன்விரோதம் விபரீதம்; தந்தை, மகன் கைது – தீவிர விசாரணையில் போலீசார்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நிலத் தகராறு காரணமாக 60 வயது மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தந்தை, மகன் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாடானை அடுத்த கல்லூர் பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணுவின் மனைவி எழுவக்காள் (60). கணவர் உயிரிழந்த நிலையில், அவர் தனியாக வசித்து வந்தார். இவருக்கும், அண்டை வீட்டைச் சேர்ந்த காளிமுத்து (70) என்பவருக்கும் இடையே நீண்டகாலமாக நில எல்லை தொடர்பான பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு எழுவக்காளின் வீட்டில் மீண்டும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த காளிமுத்துவும் அவரது மகன் லெட்சுமணனும் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த எழுவக்காள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருவாடானை போலீசார், உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களைச் சேகரித்தனர். மேலும், மோப்ப நாய் ‘பைரவி’ சம்பவ இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை சென்று தடயங்களைப் பின்தொடர்ந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த காளிமுத்து மற்றும் அவரது மகன் லெட்சுமணன் ஆகிய இருவரையும் கைது செய்து, கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





You must be logged in to post a comment.