பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது; அதிகாரிகளின் அலட்சியத்தால் சுகாதாரச் சீர்கேடு – உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட மங்கலக்குடியிலிருந்து குறிஞ்சி நகர், குஞ்சங்குளம், வெளியங்குடி, சுப்பிரமணியபுரம் விலக்கு, கரையகோட்டை விலக்கு, அஞ்சுகோட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், இந்தக் குடிநீர் குழாய் வழித்தடத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள குழாய் உடைப்புகள் காரணமாக நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீருக்காக பல கிராம மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய தேவையான குடிநீர் இவ்வாறு வீணாகுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் பராமரிப்புப் பொறுப்பு தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தும், உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்யாமல் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பலமுறை புகார் அளித்தும் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், உடைந்த குழாய்கள் வழியாக வெளியேறும் குடிநீர் தேங்கி நிற்பதால், கழிவுநீர் குழாய்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் குடிநீர் மாசுபட்டு பொதுமக்களின் உடல்நலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி, டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது.
குடிநீரை பாதுகாப்பது அரசின் முதன்மை பொறுப்பாகும். ஆனால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமான அணுகுமுறை பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து குழாய் உடைப்புகளையும் அவசர கால அடிப்படையில் சீரமைத்து, குடிநீர் வீணாவதைத் தடுக்கவும், அலட்சியத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“ஒவ்வொரு துளி குடிநீரும் மக்களின் உயிராதாரம்; அதை வீணடிப்பது இயற்கை வளத்தையும், மக்களின் உரிமையையும் புறக்கணிப்பதற்கு சமம்” என்ற கருத்தும் சமூக ஆர்வலர்களிடையே வலுத்து வருகிறது.




You must be logged in to post a comment.