24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானையில் தொடர் நூதனத் திருட்டு: இருசக்கர வாகனங்கள்,மற்றும் செல்லப்பிராணி ஆட்டையும் திருடிச் சென்ற நபர்.!

திருவாடானையில் தொடர் நூதனத் திருட்டு: இருசக்கர வாகனங்கள்,மற்றும் செல்லப்பிராணி ஆட்டையும் திருடிச் சென்ற நபர்.!

எழுதியவர்: Baker BAker August 4, 2026, 7:59 am

சிசிடிவியில் பதிவான துணிச்சலான கைவரிசை வைரல்; பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி, குற்றவாளியை விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்




ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா கல்லூர் மற்றும் மங்களக்குடி பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற நூதனத் திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

 

கல்லூர் அருகே பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் அன்புச்செழியன், தனது குடோன் முன்பு சாவியுடன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். பின்னர் அந்த வாகனம் மங்களக்குடி பகுதியில் பெட்ரோல் தீர்ந்து நின்றதாகக் கூறப்படுகிறது.

 

அதன்பிறகும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற அதே நபர், மங்களக்குடியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் வீட்டின் முன்பு சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த  இருசக்கர வாகனத்தையும் திருடியதுடன், அங்கிருந்த ஒரு ஆட்டையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்தச் சம்பவங்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன. அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

 

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.



இந்தத் தொடர்ச்சியான திருட்டு  சம்பவங்கள்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல் கண்காணிப்பை அதிகரித்து, இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்தி, சிசிடிவி கண்காணிப்பு வசதிகளை விரிவு படுத்துவதோடு, குற்றவாளியை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

மேலும், பொதுமக்களும் தங்களது இருசக்கர வாகனங்களை சாவியுடன் நிறுத்தாமல், பாதுகாப்பாக பயன்படுத்தி விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!