வெயிலில் தாகம் தீர்க்க இலவச குடிநீர்… இருபது ரூபா ஜூஸ்… பத்து ரூபா மோர் வித்தியாசமான வாசகங்களால் மட்டுமல்ல, மனிதாபிமானத்தால் மனங்களை வென்ற கீழக்கரை இளைஞர் தொழில்முனைவோர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர் பகுதியில் அமைந்துள்ள கடையின் பெயர்ப் பலகையில் எழுதப்படும் சில வார்த்தைகள் வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. , ஒரு தொழிலை மக்களின் மனதில் நிலைநிறுத்துவது மனிதநேயமும் சமூக அக்கறையும்தான் என்பதை கீழக்கரையில் உள்ள ஒரு ஜூஸ் கடை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
கடையின் முன்புறத்தில் “ரெடி கேஷ் இருந்தா குடி ஜூஸ் ப்ளீஸ்”, “தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை – ஜி பே” போன்ற நகைச்சுவை கலந்த வாசகங்கள் வழியாக வழிப்போக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தக் கடை, அதே நேரத்தில் வெயிலால் அவதிப்படும் பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்கி மனிதநேயத்தின் உண்மையான அர்த்தத்தையும் வெளிப்படுத்தி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து, குடிநீரின் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், இந்தக் கடையில் அனைவரும் தாகம் தணித்துக் கொள்ளும் வகையில் இலவசமாக குடிநீர் வழங்கப்படுகிறது.
மேலும், தரமான ஜூஸ் மற்றும் குளிர்பானங்கள் 20 ரூபாய்க்கும் மோர் பத்து ரூபாய்க்கும் என்ற சலுகை விலையில் வழங்கப்படுவதால், பொதுமக்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
குறிப்பாக மீனவர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கடை, வெறும் வணிக மையமாக அல்லாமல், மக்களின் தாகம் தீர்க்கும் சமூகப் பொறுப்புமிக்க இடமாகவும் மாறியுள்ளது.
கடையின் உரிமையாளர் லெப்பை தம்பி, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொள்ளாமல், மனிதநேயத்தையும் வாடிக்கையாளர் நலனையும் முன்னிறுத்தி செயல்பட்டு வருவது அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. வித்தியாசமான சிந்தனை, எளிமையான சேவை, சமூக அக்கறை வாடிக்கையாளரை கவரும் வார்த்தைகள் ஆகியவை இணைந்தால் சிறிய தொழிலும் மக்களின் மனதில் பெரிய இடம் பெறும் என்பதற்கு இந்த ஜூஸ் கடை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.








You must be logged in to post a comment.