ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொக்கூரணி ஆற்றுப்படுகையில், நள்ளிரவு நேரங்களில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதி பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். டிப்பர் லாரிகள் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களைப் பயன்படுத்தி, அரசு அனுமதி பெற்ற குவாரி போல வெளிப்படையாக மணல் அள்ளப்பட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி. இயந்திரத்தை முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். பின்னர் ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வாகனங்களைப் பறிமுதல் செய்து விசாரணையைத் தொடங்கினர்.
போலீசார் வருவதை அறிந்த டிப்பர் லாரி ஓட்டுநர் தப்பியோடி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
சட்டவிரோத மணல் அள்ளுதல் காரணமாக ஆற்றுப்படுகையின் இயற்கை வளம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது அதிகாரிகளின் கண்காணிப்பில் குறைபாடு உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் மணல் மாஃபியாக்கள் மீது அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற சட்டவிரோத மணல் கடத்தலை முழுமையாக தடுக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.