24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ராமநாதபுரத்தில் பரபரப்பு: சவடு மண் கொள்ளையை தடுக்க டிராக்டர் முன் படுத்துப் போராடிய பெண்!

ராமநாதபுரத்தில் பரபரப்பு: சவடு மண் கொள்ளையை தடுக்க டிராக்டர் முன் படுத்துப் போராடிய பெண்!

எழுதியவர்: Baker BAker August 1, 2026, 8:49 am

அனைத்து அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்துதான் மண் அள்ளுகிறோம்” என வைரல் வீடியோவில் மூதாட்டி கூறியதாக பரபரப்பு – உண்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, கொட்டுப்புலி கிராமத்தில் சவடு மண் அள்ளுவதில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மண் அள்ளப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மண் ஏற்றி வந்த டிராக்டரின் முன் தரையில் படுத்து தனி ஆளாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையைச் சீரமைத்தனர்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், மண் அள்ள அனுமதி பெற்றதாகக் கூறப்படும் நபரின் தாயார், “அனைத்து அதிகாரிகளுக்கும் பணம் கொடுத்துதான் மண் அள்ளுகிறோம்” என்று கூறுவதாகக் காணப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை சம்பந்தப்பட்ட துறைகள் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும், வீடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையென நிரூபிக்கப்பட்டால், தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சவடு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்ட அளவு, உண்மையில் எவ்வளவு மண் அகற்றப்பட்டது, சுற்றுச்சூழல் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா, அதிகாரிகள் தங்களது கண்காணிப்பு பொறுப்பை முறையாக மேற்கொண்டார்களா என்பன குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பொதுமக்களின் நலன், இயற்கை வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தும் வகையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடி கவனம் செலுத்தி உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!