24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு மாதமாக குடிநீர் இல்லை: நம்புதாளை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.!

ஒரு மாதமாக குடிநீர் இல்லை: நம்புதாளை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.!

எழுதியவர்: Baker BAker July 30, 2026, 11:18 pm

அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – தீர்வு கிடைக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் என எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினைக்காத்தான்வயல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் நம்புதாளை ஊராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிழக்குத் தெரு, மேற்குத் தெரு, படையாச்சி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு மாதமாக விநியோகம் முறையாக நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக, மேற்குத் தெரு பகுதிக்கு சுமார் 20 நாட்களுக்குப் பிறகு குடிநீர் திறக்கப்பட்டபோதும், ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று குடம் தண்ணீர் மட்டுமே கிடைத்ததாக அப்பகுதி பெண்கள் வேதனை தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடனடியாக சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டத்தின் போது அலுவலகத்தில் பொறுப்பான அதிகாரிகள் யாரும் இல்லாதது பொதுமக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. குடிநீர் விநியோகப் பணியில் இருந்த ஊழியரிடம் தங்களது கோரிக்கையை தெரிவித்த பொதுமக்கள், “நாளையும் சீராக குடிநீர் வழங்கப்படாவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அலட்சியம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நம்புதாளை ஊராட்சியில் தடையின்றி குடிநீர் வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

இப்பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!