திருவாடானை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் கோலாகலமாக நடைபெற்ற பூத்தட்டு ஊர்வலம்; அம்மன் தரிசனத்திற்காக அலைமோதிய பக்தர்கள்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை கிழக்குத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, ஜூலை 23ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூத்தட்டு ஊர்வலம் பக்தி மிகுந்த சூழலில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்ற நிலையில், இரவு நேரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து, விரதமிருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு பக்தர்களும் வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூத்தட்டுகளை ஏந்தி பக்தி முழக்கங்களுடன் ஊர்வலமாக வந்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு அர்ச்சனை செய்து தரிசனம் பெற்றனர்.
பூத்தட்டு ஊர்வலத்தால் திருவாடானை நகரமே பக்தி வெள்ளத்தில் மிதந்தது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு திருவிழாவை சிறப்பித்தனர்.




You must be logged in to post a comment.