திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் கூரை பெயர்ந்து பக்தர்கள் உயிர்தப்பினர்; அசம்பாவிதம் நடக்கும் முன் இடித்து புதிய மண்டபம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூர் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோயிலில், பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள சுமார் 40 ஆண்டுகள் பழமையான திறந்தவெளி மண்டபம் மிகவும் சிதிலமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது.
சமீபத்தில் மண்டபத்தின் மேற்கூரையிலிருந்து பெரிய சிமெண்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்ததில், அங்கு நின்றிருந்த பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்தச் சம்பவம் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் ஆடி வெள்ளி போன்ற சிறப்பு நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆபத்தான மண்டபத்திலேயே தங்கி வழிபாடு மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
மண்டபத்தின் பல இடங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளிப்படும் அளவுக்கு சேதமடைந்துள்ளதால், எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
எனவே, உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பே சிதிலமடைந்த இந்த மண்டபத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் பாதுகாப்பு வசதிகளுடன் புதிய தங்கும் மண்டபம் அமைக்க தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.