24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தடுப்பணையில் தண்ணீர் திறக்கும்போது அலட்சியம்: உயிரிழப்புகளைத் தடுக்க எச்சரிக்கை சைரன் அமைக்க CITU வலியுறுத்தல்.!

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் தடுப்பணையில் தண்ணீர் திறக்கும்போது அலட்சியம்: உயிரிழப்புகளைத் தடுக்க எச்சரிக்கை சைரன் அமைக்க CITU வலியுறுத்தல்.!

எழுதியவர்: Baker BAker July 26, 2026, 11:59 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சமயபுரம் மற்றும் ஊமபாளையம் தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நேரங்களில் பொதுமக்களுக்கு உரிய எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்படாததால் உயிரிழப்பு அபாயம் நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ள மேட்டுப்பாளையம் தாலுகா CITU பொது தொழிலாளர் சங்கம், இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அவசர கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.

சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பாஷா வெளியிட்டுள்ள மனுவில், 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் 20 மெகாவாட் மின் உற்பத்தி இலக்குடன் அமைக்கப்பட்ட இந்த தடுப்பணைகளில் தற்போது சுமார் 4 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பணைகளால் ஆற்றின் இயற்கை ஓட்டம் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்குவதால் கழிவுகள் அகலாமல் துர்நாற்றம் வீசுவதுடன், நிலத்தடி நீர் மாசுபடுவதற்கும், குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தடுப்பணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் போது ஆற்றில் குளிக்கும் மற்றும் துணி துவைக்கும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் சைரன் முறையாக ஒலிக்கப்படுவதில்லை என்றும், பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சில நாட்கள் மட்டுமே நடவடிக்கை எடுத்து பின்னர் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனவே, தண்ணீர் திறக்கப்படும் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக எச்சரிக்கை சைரன் இயக்கப்படுவதை மின்சார வாரியமும் மாவட்ட நிர்வாகமும் நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும் என்றும், திடீர் வெள்ளப்பெருக்கால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளைத் தடுக்க முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பவானி ஆற்றின் இயற்கை ஓட்டத்தை உறுதி செய்ய தடுப்பணைகளின் மதகுகளைத் திறந்து நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்றும், தடுப்பணைகளின் தேவையையும் பயன்பாட்டையும் அரசுத் துறைகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய அரசு துறைகளும் இணைந்து உடனடி ஆய்வு நடத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பவானி ஆற்றுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என CITU வலியுறுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!