1990-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கீழக்கரையின் வரலாற்றுச் சின்னம் விரிசலால் ஆபத்தில் – மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அறக்கட்டளையும் இணைந்து உடனடி சீரமைப்பு மேற்கொள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கீழக்கரை நோக்கிச் செல்லும் பிரதான நெடுஞ்சாலையில், கடந்த 1990-ஆம் ஆண்டு அப்போதைய பேரூராட்சி மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து நிறுவிய வள்ளல் சீதக்காதி தோரணவாயில், கீழக்கரையின் வரலாற்றையும் பெருமையையும் பறைசாற்றும் முக்கிய நினைவுச் சின்னமாக விளங்கி வருகிறது.
கீழக்கரைக்கு வருகை தரும் பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரையும் முதலில் வரவேற்கும் அடையாளமாக திகழும் இந்த தோரணவாயில் தற்போது பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, அவ்வப்போது கற்கள் பெயர்ந்து கீழே விழுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வழியாக ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, தூத்துக்குடி, சாயல்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், தென்காசி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், நாகூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்படுகின்றன. வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தோரணவாயிலிலிருந்து கற்கள் விழும் சம்பவங்கள் தொடர்ந்தால் எப்போது வேண்டுமானாலும் பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வரலாற்றுச் சின்னத்தை பாதுகாப்பது அரசின் கடமையும், அதை பராமரிப்பது சம்பந்தப்பட்ட அறக்கட்டளையின் பொறுப்புமாகும் என்பதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, அறக்கட்டளையுடன் இணைந்து தோரணவாயிலை பாதுகாப்பு தரநிலைகளுடன் புதுப்பித்து, கீழக்கரையின் பாரம்பரிய அடையாளத்தை வருங்கால தலைமுறைக்கும் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை அல்ல; அதற்கு முன்பே பாதுகாப்பு நடவடிக்கை வேண்டும்” என்பதே அனைவரின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.