இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் சிக்கின; தொடர்புடைய மேலும் சிலரை மரைன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ₹2 கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை மரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள நிலையில், மேலும் சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேவிபட்டினம் மரைன் காவல் ஆய்வாளர் ஜான்சிராணி, உதவி ஆய்வாளர் அய்யனார், தனிப்பிரிவு ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், ரகசிய தகவலின் அடிப்படையில் முள்ளிமுனை கடற்கரைப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 15 மூட்டைகளை சோதனையிட்டதில், 250 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் சந்தை மதிப்பு சுமார் ₹2 கோடி என போலீசார் தெரிவித்தனர். இந்த கடல் அட்டைகள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை கைப்பற்றிய மரைன் போலீசார், கடத்தல் தொடர்பாக கண்கொள்ளான்பட்டினத்தைச் சேர்ந்த தேனியல் என்பவரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.