“நிழல் தந்த மரங்களை வெட்ட யார் அனுமதி?” – ஏர்வாடியில் புங்கை, வேப்பமரங்கள் அகற்றப்பட்டதால் மக்கள் கொந்தளிப்பு
“மரம் வளர்க்கும் அரசின் முயற்சிக்கு எதிராக செயல்படுகிறார்களா? அதிகாரிகள் மௌனம் ஏன்?” – மாவட்ட நிர்வாகம் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி பிரதான சாலையோரத்தில் பல ஆண்டுகளாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நிழல் அளித்து வந்த புங்கை மரம் மற்றும் வேப்பமரம் ஆகியவற்றை சில நபர்களால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான கோடை வெயிலில் பாதசாரிகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஓய்வெடுத்து நிழல் பெற உதவிய மரங்கள் எந்த அறிவிப்பும் இல்லாமல் வெட்டப்பட்டதாக கூறப்படுவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
“இந்த மரங்களை வெட்ட யார் அனுமதி வழங்கினர்? சம்பந்தப்பட்ட துறைகளின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட்டதா? அரசு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? அதிகாரிகள் கண்காணிப்பு எங்கே?” என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு மரம் பல ஆண்டுகள் வளர்ந்த பின்னரே முழுமையான நிழல் தரும். புங்கை மற்றும் வேப்பமரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், காற்றை தூய்மைப்படுத்துகின்றன; வெப்பத்தை குறைக்கின்றன; பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு வாழ்விடமாக அமைகின்றன; நிலத்தடி நீர் பாதுகாப்புக்கும் பங்களிக்கின்றன. மனிதர்களின் உடல் நலத்திற்கும் இயற்கை சமநிலைக்கும் இத்தகைய மரங்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளன.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் திட்டங்களை செயல்படுத்தி, பசுமையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பல ஆண்டுகள் வளர்ந்து பொதுமக்களுக்கு பயனளித்து வந்த மரங்கள் வெட்டப்பட்டிருப்பது அரசின் சுற்றுச்சூழல் நோக்கத்திற்கே எதிரான செயலாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“மரக்கன்றுகளை நட்டு வளர்க்க அரசு கோடிக்கணக்கில் நிதி செலவிடுகிறது. ஆனால் வளர்ந்து மக்களுக்கு பயனளிக்கும் மரங்களை பாதுகாக்க அதிகாரிகள் தவறுவது ஏன்? சம்பவம் நடைபெறும் வரை அதிகாரிகள் எங்கே இருந்தனர்?” என அப்பகுதி மக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக பல மடங்கு மரக்கன்றுகளை நட்டு அவற்றை பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பசுமையை பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும் ஆகும். ஆனால் அந்தப் பொறுப்பை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியம் தொடர்ந்தால், எதிர்கால தலைமுறைக்கு இயற்கையை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக மாறும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.




You must be logged in to post a comment.