வருங்கால வைப்பு நிதி கோரி மேட்டுப்பாளையத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில், மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் பங்கேற்றதால், நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர், காவல் ஆய்வாளர் ஞானசேகர் ஆகியோர் முன்னிலையில், சிஐடியு தாலுகா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, நகராட்சியின் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் டெக்டஸ் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி தொகையை தொழிலாளர்களின் கணக்கில் உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒப்பந்ததாரர் தவறும் பட்சத்தில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, வருங்கால வைப்பு நிதி சட்ட விதிகளின்படி தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய தொகையை பெற்றுத்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு தாலுகா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சாநவாஸ், மனாசே சாமுவேல், முகமது அலி ஜின்னா, ஹபிபுல்லா, தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் நாகராஜ், பண்ணாரி, அசோக், ராஜா மற்றும் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, நகராட்சி அலுவலக வளாகத்தில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர்.




You must be logged in to post a comment.