26 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » நான் மதிமுக வில் இல்லை சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் திடீர் அறிவிப்பு..

நான் மதிமுக வில் இல்லை சீர்காழி எம்எல்ஏ செந்தில் செல்வன் திடீர் அறிவிப்பு..

எழுதியவர்: Askar June 26, 2026, 3:06 pm

ம.தி.மு.க. உட்கட்சிப் பூசலும், தி.மு.க. கூட்டணி தொடர்பான இழுபறியும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், “நான் ம.தி.மு.க-வில் இருந்து விலகிவிட்டேன்” என்று சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் அறிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட உயர்நிலைக் குழு நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆனால், இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைச் சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் முற்றிலுமாகப் புறக்கணித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மதிமுக, திமுக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இதில் சீர்காழி மற்றும் கடையநல்லூர் ஆகிய 2 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது.

கடந்த சில நாட்களாகவே வைகோ, திமுக கூட்டணி குறித்தும், அதில் மதிமுக சந்தித்த சவால்கள் குறித்தும் பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்தார். தங்களை விட பலம் குறைந்த பிற கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும், தன்மானத்தைச் சமரசம் செய்து கொண்டுதான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததாக அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.

நடந்து முடிந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் வைகோவிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அடுத்தகட்டமாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தவெக-விற்கு ஆதரவளிக்கும் மனநிலையில் மதிமுக தலைமை இருப்பதாகக் கூறப்படுகிறது.

மதிமுக தலைமை திமுக கூட்டணியை விட்டு வெளியேறி மாற்றுப் பாதை நோக்கிச் செல்ல திட்டமிட்டு வருவதால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தன் இரு எம்.எல்.ஏ-க்களையும் அவர்களது பதவியை ராஜினாமா செய்யும்படி கட்சித் தலைமை வற்புறுத்தியுள்ளது.

தலைமையின் இந்த உத்தரவை ஒரு எம்.எல்.ஏ ஏற்றுக் கொண்டதாகவும், ஆனால் மற்றொரு எம்.எல்.ஏ-வான சீர்காழி செந்தில் செல்வன் இதனை ஏற்க முற்றிலும் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. இதன் காரணமாகவே அவர் உயர்நிலைக் குழு கூட்டத்தைப் புறக்கணித்தார்.

கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட இந்த முரண்பாட்டைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன், தான் தற்போது ம.தி.மு.க-வில் இல்லை என்றும், அக்கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார்.

தனது விலகல் குறித்து அவர் பேசுகையில், “கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சீர்காழி தனித் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்ற சூழல் நிலவியதால், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்தோம். அதற்காக, நான் வகித்து வந்த மாதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அப்போதே விலகி, திமுகவின் அடிப்படை உறுப்பினராக என்னை இணைத்துக் கொண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

தற்போது நான் மதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாத காரணத்தால், அக்கட்சியின் கூட்டங்களில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை. நான் தற்போது திமுகவின் அடிப்படை உறுப்பினராக நீடிப்பதால், இனிவரும் காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகத் எனது பணிகளை திமுகவிலேயே தொடரப் போகிறேன். சீர்காழி தொகுதி மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றுவேன்” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

உயர்நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நாளை மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறுவது குறித்தும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்தும் இறுதி முடிவெடுக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!