20 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.!

எழுதியவர்: Baker BAker June 19, 2026, 10:19 pm

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருவதைக் கண்டித்தும், தொழிலாளர் விரோத போக்குகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை தாலுகா செயலாளர் தோழர் ஏ. நவீன்சந்திரன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆசரா மற்றும் தோழர் எல். சங்கரலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். அவர்கள் தங்களது உரையில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகள், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக (Labour Codes) சுருக்கிய நடவடிக்கை, தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்தனர்.

மேலும், விவசாய விளைபொருட்களுக்கு சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர் நலச் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் பி. கணேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் ராஜரத்தினம், புட்டுசாமி, தமிழ்மணி, ஹரிபாபு உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இறுதியாக தாலுகா குழு உறுப்பினர் ஓ. குமார் நன்றி கூறியதுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!