23 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இருளில் மூழ்கிக்கிடக்கும் அண்ணல் அம்பேத்கர் சிலை! தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்..

இருளில் மூழ்கிக்கிடக்கும் அண்ணல் அம்பேத்கர் சிலை! தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்..

எழுதியவர்: Askar June 13, 2026, 10:25 am

2 வாரங்களாக இருளில் மூழ்கிக்கிடக்கும் அண்ணல் அம்பேத்கர் சிலை! தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் அலட்சியத்திற்கு வன்மையான கண்டனம்..

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இறச்சகுளம், அருள்ஞானபுரத்தில் அமைந்துள்ள சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை கடந்த இரண்டு வாரங்களாக மின்சார வசதியின்றி இருளில் மூழ்கிக் கிடப்பது அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக, அம்பேத்கர் சிலைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் கம்பிகள் (ஒயர்கள்) அறுந்து விழுந்துள்ளன. இது நடந்து 2 வாரங்கள் கடந்த நிலையிலும், தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் இதுவரை எந்தவொரு சீரமைப்பு நடவடிக்கையும் எடுக்காமல், மௌனம் சாதித்து வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களின் அடிப்படைத் தேவைகளையும், பொதுச் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டிய கடமை கொண்ட அரசு அதிகாரிகள், ஒரு மாபெரும் தலைவரின் சிலை இருளில் கிடப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

இது தற்செயலான அலட்சியமா? அல்லது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை என்பதால் காட்டப்படும் திட்டமிட்ட அலட்சியமா?

என்ற நியாயமான சந்தேகம் ஒடுக்கப்பட்ட மற்றும் பொதுமக்களின் மத்தியில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நாட்டின் மிக உயரிய சட்டத்தை வகுத்துத் தந்த, கோடிக்கணக்கான மக்களின் விடிவெள்ளியாய் திகழும் ஒரு உலகப் பொதுத் தலைவருக்கு, அரசு நிர்வாகம் காட்டும் இந்த அவமதிப்பு சனநாயகத்தின் மீதான நம்பிக்கையை சிதைப்பதாக உள்ளது.

தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகம் உடனடியாகத் தலையிட்டு, அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைச் சீரமைத்து, அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு தடையற்ற மின்சாரத்தை வழங்க வேண்டும்.

2 வாரங்களாக இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அம்பேத்கர் சிலைக்கு மின்சாரம் கொடுக்கும் பணியை திட்டமிட்டு தாமதப்படுத்தினால் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிற்று தொடர் போராட்டங்கள் நடத்தும் என இந்த அறிக்கை வாயிலாக எச்சரிக்கிறோம்.

தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!