ராமநாதபுரத்திலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை மது போதையில் ஓட்டியதாகக் கூறப்படும் தற்காலிக ஓட்டுநரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் திருவாடானை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரத்திலிருந்து சிதம்பரம் நோக்கி TN 68 N 1321 பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தொண்டி அருகே சென்றபோது பேருந்து கட்டுப்பாடின்றி தாறுமாறாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தொண்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் பேருந்தைத் துரத்திச் சென்றனர். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பி.வி. பட்டினம் கிராமம் அருகே பேருந்தை வழிமறித்து நிறுத்தினர்.
பின்னர் ஓட்டுநரை கீழே இறக்கி விசாரித்தபோது அவர் கடுமையான மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் காட்டுமன்னார்குடி பகுதியைச் சேர்ந்த மனோ என்பதும், ஒருநாள் மாற்றுப் பணிக்காக (On Deputation) தற்காலிகமாக அந்தப் பேருந்தை இயக்க வந்திருந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தையடுத்து பேருந்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். பின்னர் மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பயணிகள் மற்றும் பொதுமக்களின் சமயோசித நடவடிக்கையால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டதுடன், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்துத் துறை மற்றும் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.