ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு தலைமை மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனை செய்வதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த நபரின் உடல் அழுகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த கிருஷ்ணகுட்டி என்ற முகமது இப்ராஹிம், கடந்த 28-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது.
ஆனால், குளிர்சாதனப் பெட்டியின் மின் இணைப்பு இயக்கப்படாமல் இருந்ததாகக் கூறப்படுவதால், அதில் வைக்கப்பட்டிருந்த உடல் முற்றிலும் அழுகிய நிலையில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “உடலை கைப்பற்றிய நாளிலேயே பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. காவல் ஆய்வாளர் இல்லை, மருத்துவர் இல்லை, ஊழியர்கள் இல்லை என பல்வேறு காரணங்களை கூறி மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் காலதாமதம் செய்துள்ளன” என்று குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கையில், உயிரிழந்தவரின் நெருங்கிய உறவினர்கள் வெளியூரிலிருந்து வர வேண்டியிருந்ததால், அவர்கள் வரும் வரை காத்திருந்த காரணத்தால் பிரேதப் பரிசோதனை தாமதமானதாக தெரிவித்தனர்.
எனினும், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்படும் உடல்களை பாதுகாப்பாக பராமரிப்பது மருத்துவமனை நிர்வாகத்தின் அடிப்படை பொறுப்பாகும். அந்த பொறுப்பில் ஏற்பட்ட அலட்சியத்தால் உடல் அழுகியிருப்பது மனிதநேயமற்ற செயல் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் உடனடியாக விசாரணை நடத்தி, பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.