19 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ஊட்டி பூங்காவில் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும்; சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள்..

ஊட்டி பூங்காவில் பல்வேறு வசதிகளை செய்து தர வேண்டும்; சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள்..

எழுதியவர்: Askar May 19, 2026, 9:09 pm

ஊட்டி மலர்க் கண்காட்சியில் கட்டணத்தை குறைக்கவும்; மழைக்காலங்களில் பூங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக ஒதுங்க இடவசதி ஏற்படுத்தவும் புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு செயல்படுத்த சுற்றுலாப் பயணிகள் வேண்டுகோள்..

நீலகிரி மாவட்டத்தின் சர்வதேச அடையாளமாகத் திகழும் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற கோடை விழா மலர்க் கண்காட்சி இந்த ஆண்டும் கோலாகலமாகக் களைகட்டியுள்ளது. 1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த அரசு தாவரவியல் பூங்கா, நீலகிரியின் இயற்கை வளத்தையும் அரிய தாவர இனங்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. பின்னர் மலர் வளர்ப்பு, தோட்டக்கலை மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கோடை மலர்க் கண்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய நிகழ்வாக வளர்ந்துள்ளது. இந்தாண்டு பல லட்சம் வண்ண மலர்களால் தமிழர்களின் பாரம்பரியக் கலைகள், கட்டடக் கலை, வீர விளையாட்டுகள் மற்றும் இயற்கை வாழ்க்கை முறைகளை பிரதிபலிக்கும் பிரம்மாண்ட மலர்ச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முப்பரிமாண மலர் வடிவங்கள், பாரம்பரிய கலை அலங்காரங்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் வடிவமைப்புகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றன. கோடை வெயிலின் தாக்கமே தெரியாமல், இதமான மலைக் குளிரில் முழு பூங்காவும் வண்ணமயமான சொர்க்கபுரியாக மாறியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு வருகின்றனர். வார இறுதிகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து, பூங்கா முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்படுகிறது. ஆனால் திடீரென மழை பெய்யும் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் ஒதுங்கி நிற்க போதிய வசதிகள் இல்லாதது பெரிய குறையாக மாறியுள்ளது. குறிப்பாக குடும்பத்துடன் வரும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மழையில் நனைந்து அவதிப்படுகின்றனர். எனவே, பூங்கா வளாகத்தில் கூடுதல் மழைக்கால தங்குமிடங்கள், ஓய்வு மண்டபங்கள் மற்றும் பாதுகாப்பு கூடங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும், தற்போது மலர்க் கண்காட்சிக்காக வசூலிக்கப்படும் 125 ரூபாய் நுழைவுக் கட்டணம் சுற்றுலாப் பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் சென்றால் 1000 ரூபாய் செலவாகும் நிலை இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இவ்வளவு தொகை வசூல் செய்தாலும் அதற்கான எந்த முன் ஏற்பாடும் குறைந்தபட்சம் மழை வந்தால் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாத நிலை தான் உள்ளது இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பூங்காவை பார்வையிட சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பெரியவர்களுக்கு ₹50 மற்றும் சிறுவர்களுக்கு ₹20 என்ற அளவில் கட்டணத்தை குறைத்து வசூலிக்கவும், மழைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக ஒதுங்கிட தேவையான வசதிகளை உடனடியாக ஏற்படுத்தவும் புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் கோரிக்கையும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!