மெக்காவுக்கு குறைந்த செலவில் அழைத்துச் செல்வதாக கூறி 300 பேரிடம் மோசடி, உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் புனித ஹஜ் பயணத்திற்கு சலுகை கட்டணத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறி மஹ்தி ஹஜ் & உம்ரா சர்வீஸ் LLP என்ற கம்பெனி கவர்ச்சி விளம்பரம் செய்தது. மேலும் முதலில் வரும் 300 நபர்களுக்கு மட்டுமே மேற்படி சலுகை அளிக்கப்படும் என்று மேற்படி கம்பெனியின் பங்குதாரர்களான அகமது மீரான், அஜ்மல் அபுதாஹிர், முஹமது சுஹைல் ஆகியோர்களும், மேற்படி கம்பெனியின் முகவர்களில் ஒருவரான மர்ஜான் என்பவரும் நம்பிக்கையாகக் கூறினார்கள். மேற்படி கவர்ச்சியான விளம்பரத்தை நம்பி 300 நபர்கள் மேற்படி கம்பெனியின் வங்கி கணக்கிற்கும், நேரடியாகவும் ஹஜ் புனித பயணத்திற்கான மொத்த தொகை ரூ.3,37,500/- ஐ பல தவணைகளில் செலுத்தினர். ஆக ரூ.10 கோடிக்குமேல் மேற்படி வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மேற்படி நபர்கள் அனைவரும் சேர்ந்துகொண்டு 300 நபர்களையும் ஏமாற்றியதை அறிந்த பாதிக்கப்பட்ட நபர்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் கரூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகி புகார் அளித்தனர். மேற்படி புகார் கரூர் மாவட்ட குற்றப்பிரிவிற்கு அனுப்பப்பட்டு கடந்த 17.04.2026 அன்று மேற்படி பங்குதாரர்கள் மற்றும் முகவர் மீது FIR பதிவுசெய்யப்பட்டது. ஆனால் அதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட காவல்துறை கைது நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளவில்லை. மேலும் மேற்படி குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்வதை அறிந்த பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ஜமீலா பேகம் என்ற நபர் மாண்புமிகு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல் நடவடிக்கை வேண்டி வழக்கு தாக்கல் செய்தார். மேற்படி வழக்கு நேற்று (30.04.2026) நீதியரசர் திருமதி.விக்டோரியா கௌரி அவர்கள் முன்பு விசாரணைக்கு வந்தபோது மாண்புமிகு நீதிபதி அவர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும் என்றும், மேற்படி நபர்கள் தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்ப வேண்டுமென்றும் கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு உத்தரவிட்டும் மேற்படி குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டு விரிவான உத்தரவு பிறப்பித்தார்.




You must be logged in to post a comment.