24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாப்போம்! எஸ்டிபிஐ ‘மே’ தின வாழ்த்து…

உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்களைப் பாதுகாப்போம்! எஸ்டிபிஐ ‘மே’ தின வாழ்த்து…

எழுதியவர்: Askar May 1, 2026, 12:24 am

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; உழைப்பால் உலகை உயர்த்தும் உன்னத தொழிலாளர்கள் அனைவருக்கும், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த தொழிலாளர் தின (மே தின) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடிப் பெற்ற மகத்தான வெற்றியை இந்த மே தினம் நமக்கு நினைவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தின் ஈடு இணையற்ற முயற்சியைப் போற்றுவதும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அவர்களைப் பாதுகாப்பதுமே இத்தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கமாகும். எட்டு மணி நேர வேலைக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டங்களே மே தினம் உருவாவதற்குக் நேரடி காரணமாயின. ஆனால், அன்று போராடிப் பெற்ற தொழிலாளர்களின் பல உரிமைகள், இன்றைய ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளால் பறிபோகத் தொடங்கியுள்ளன. தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவந்து தொழிலாளர்களின் உரிமைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. தொழிலாளி வர்க்கத்தை ஒப்பந்த முறையின்கீழ் கொண்டு வருதல், தொழிற்சங்க உரிமைகளைப் பறித்தல் மற்றும் பணி நேரத்தை நீட்டித்தல் உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தற்போதைய ஆளும் அரசுகளால் மெல்ல மெல்ல அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் பெயரில் தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிரான மாற்றங்களை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. நமது நாட்டின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் தொழிலாளர்களின் கடும் உழைப்பே அஸ்திவாரம். நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் எண்ணற்ற தொழிலாளர்களின் வியர்வையும், பங்களிப்பும் அடங்கியுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. எனவே, தொழிலாளர் வர்க்கத்தின் நலனைப் புறந்தள்ளும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன். தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பையும், உரிமைகளையும் உறுதிப்படுத்தும் முறையான மற்றும் திட்டமிட்ட நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!