பெண்ணை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அதிரடி தீர்ப்பு!
பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு!
நேரில் கண்ட ஒரே சாட்சியின் சாட்சியத்தை வைத்து திறமையாக வாதாடி தண்டனை வாங்கிக் கொடுத்த அரசு சிறப்பு வழக்கறிஞர்.
43 வயதான பெண்ணை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கி பத்மநாதபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது . இது தொடர்பான விவரம் வருமாறு….
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட உம்மன் கோடு வெட்டுக்காட்டு விளையை சேர்ந்த சேர்ந்தவர் செல்லன் மகன் மெர்லின் என்ற மெர்லின் ராஜ் வயது 42/2026. இவர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ராணுவத்தில் பணியாற்றிய போது தனது தவறான நடத்தை காரணமாக ராணுவ நீதிமன்ற விசாரணையில் இருந்து தப்புவதற்காக ராணுவ பணியிலிருந்து தலைமறைவானவர் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் ராணுவ பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
அதன் பின்னர் தனது ஊரில் சுற்றித்திரிந்ததாக கூறப்படும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 07-02-2021 அன்று மெர்லின் என்ற மெர்லின் ராஜ் என்பவர் மேக்கா மண்டபம் புன்னத்து விளையை சேர்ந்த வின்சென்ட் என்பவரின் மனைவி மேரி ஜெயா அமுதா வயது 43/2021 என்பவர் ரேஷன் கடைக்கு சென்று விட்டு உம்மன் கோடு பகுதியில் உள்ள நல்ல பிள்ளை பெற்றான் குளத்தின் அருகே வரும் போது அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகையை பறிக்க திட்டமிட்டு அவரை குளத்தில் மூழ்கடித்து கொலை செய்தார். அதன் படி வழக்குப்பதிவு செய்த திருவட்டார் போலீசார் மேற்படி மெர்லின் ராஜை கைது செய்தனர்.
இந்நிலையில் அந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை அதிகாரிகளான ஆய்வாளர்கள் ரவீந்திரன், ஷாம் சுந்தர், ஷேக் அப்துல் காதர் ஆகியோர் விசாரித்து பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர் . அதன்படி பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. திடீரென்று விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி நீதிமன்ற காவலில் வைத்தே வழக்கை விசாரித்தார்.
மேற்படி வழக்கில் சுமார் 20க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குறிப்பாக நேரில் கண்ட சாட்சியாக ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்தார். ஆனால் அரசு தரப்பில் வழக்கை நடத்திய அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் வி. எம். ஜெகதேவ் கொலையாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிறப்பாக வழக்கை நடத்தி வந்தார். அதன் காரணமாக அனைத்து சாட்சியங்களையும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து கொலையாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க மிகவும் உதவியாக இருந்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடந்து வந்த வழக்கில் நீதிபதி பரம சிவ தாஸ் தீர்ப்பு கூறினார். .
அதில் மேற்படி கொலை வழக்கில் மெர்லின் என்ற மெர்லின் ராஜ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். மேலும் தண்டனை விவரங்கள் குறித்து அறிவித்தார்.
அதில் கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் மற்றும் 50000 ரூபாய் அபராதமும்
வழிப்பறி செய்த குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும்
தடுத்து நிறுத்திய குற்றத்திற்காக ஒரு மாதம் ஜெயில் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும்
சாட்சி தேவதாஸ் என்பவரை தாக்கியதற்காக ஆறு மாதம் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும்
இறந்த பெண்மணியை தாக்கியதற்காக ஒரு மாதம் கடுங்காவல் தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
மேலும் அபராத தொகையில் இறந்து போன மேரி ஜெயா அமுதாவின் கணவர் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு இழப்பீட்டு தொகையாக வசூலித்த தொகையில் ஐம்பத்தி ஐந்தாயிரம் ரூபாயை வழங்கவும் மேலும் 3 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் சாட்சி தேவதாஸுக்கு அபராத தொகையில் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.
தீர்ப்பு அளிக்கப்படும் போது தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் திருவட்டார் காவல் ஆய்வாளர் மதன் ராம்குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.




You must be logged in to post a comment.