24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு: 175 இடங்களில் உதயசூரியன் போட்டி..

தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு: 175 இடங்களில் உதயசூரியன் போட்டி..

எழுதியவர்: Askar March 25, 2026, 6:43 am

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் அதிக எண்ணிக்கையிலான கட்சிகள் இடம்பெற்றுள்ளதால், ஆரம்பத்தில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளில் பெரும் இழுபறி நீடித்தது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிட ஆர்வம் காட்டின. இருப்பினும், தி.மு.க தலைமை ஒவ்வொரு கட்சியுடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிகளின் எண்ணிக்கையைச் சுதாரிப்புடன் குறைத்து இறுதி செய்துள்ளது. குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நீண்ட நேரத்தைக் கடந்து ஒரு முடிவுக்கு வந்தது. அதன்படி, இன்று கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகளும், தே.மு.தி.க-விற்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதற்கிடையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்குக் குறைந்த அளவிலான தொகுதிகளை ஒதுக்க தி.மு.க முன்வந்ததோடு, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது. இதன் காரணமாக, கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளார். இதுவரை தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 66 தொகுதிகளைப் பகிர்ந்தளித்துள்ளது. இதன் விவரங்களைப் பார்த்தால், காங்கிரசுக்கு 28, தே.மு.தி.க-விற்கு 10, விடுதலைச் சிறுத்தைகளுக்கு 8, இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சிகளுக்குத் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்குத் தலா 2 இடங்களும், ம.தி.மு.க-விற்கு 4 இடங்களும் (3 உதயசூரியன் சின்னம், 1 தனி சின்னம்) வழங்கப்பட்டுள்ளன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 66 இடங்களில் 7 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே களம் காணுகின்றன. இதில் கொ.ம.தே.க-வின் 2 இடங்கள், மனிதநேய மக்கள் கட்சியின் 2 இடங்கள் மற்றும் ம.தி.மு.க-வின் 3 இடங்கள் அடங்கும். இவை தவிர, இன்னும் கூட்டணியில் உள்ள கருணாஸ் மற்றும் தனியரசு தலைமையிலான கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், அவர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து திமுக 168 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. இதனுடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பிற கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!