24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மள மளவென குறைந்து வரும் தங்கம் விலை! சற்று மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…

மள மளவென குறைந்து வரும் தங்கம் விலை! சற்று மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்…

எழுதியவர்: Askar March 23, 2026, 1:09 pm

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று இல்லத்தரசிகளுக்கும் நகை பிரியர்களுக்கும் மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. மார்ச் மாத தொடக்கத்தில் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்த தங்கம் விலை, தற்போது அதிரடியாகச் சரிந்து சாமான்ய மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலைக்கு வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சவரனுக்கு 1 லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையானது நடுத்தர வர்க்கத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், கடந்த வியாழக்கிழமை முதல் விலை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அந்த வகையில், இன்று (மார்ச் 23, 2026) தங்கம் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.5,360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,03,600 என்ற விலைக்கு வந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு சவரன் ரூ.1,08,960-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் சரிவு நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.250-க்கு விற்கப்பட்ட வெள்ளி, இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,35,000 ஆக உள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு வலுவடைந்தது போன்ற காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து உயர்ந்து வந்த விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில் மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!