24 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தார்மிக-அரசியல் மற்றும் இராணுவ பலத்தை இழந்த அமெரிக்கா..

தார்மிக-அரசியல் மற்றும் இராணுவ பலத்தை இழந்த அமெரிக்கா..

எழுதியவர்: Abubakker Sithik March 20, 2026, 9:03 am

ஈரான் மீது தாக்குதல் தொடுத்து விழி பிதுங்கி நிற்கின்றது அமெரிக்கா. அரசியல், தார்மிகம், இராணுவம் என மூன்று தளங்களிலும் மோசமான தோல்வியைச் சந்தித்து கீழே விழுந்து கிடக்கின்றது அமெரிக்கா. அரசியல் அரங்கில் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே மறுபக்கம் ஈரான் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. ஒரு சுதந்திர நாட்டின் ஆட்சித் தலைவரைச் சாய்த்ததன் மூலமாக தார்மிக, அரசியல் பலத்தை இழந்துவிட்டது.

பொருளாதார அரங்கில்: ஹோர்மஸ் ஜலசந்தியின் மீது தன்னுடைய ஆதிக்கத்தை ஈரான் நிலை நிறுத்திக் கொண்டது. சீன யுவான் நாணயத்தில் வணிகப் பரிமாற்றம் செய்பவருக்கு சலுகை என்று வேறு அறிவித்துவிட்டது. இராணுவம்: ஈரானின் ஹைபர் சோனிக் ஏவுகணைகளை – ஒலியை விட வேகமாகப் பாய்ந்து வந்து அழிக்கின்ற ஏவுகணைகளை எதிர்கொள்கின்ற திராணி அமெரிக்காவுக்கு இல்லை. விரைவில் அமெரிக்க டொனால்ட் டிரம்ப் தோல்வியின் உச்சத்தை எட்டிப்பிடிக்க உள்ளார்.

ஈரான் மீதான போர் : அமெரிக்கா-இஸ்ரேல் நினைத்து என்ன? நடந்தது என்ன? 

1. ஒரே நாளில் ஒரே நேரத்தில் சுப்ரீம் தலைவர் கமேனி உட்பட உயர் மட்டத் தலைவர்கள், அதிகாரிகள், ஆளுமைகள் என நாற்பதுக்கும் அதிகமானோரைக் கொன்று விட்டால் போதும். அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள். ஆட்சி மாற்றம் தானாக நிகழும் என்றே டிரம்பும் நெதன்யாஹுவும் மனப்பால் குடித்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. அதற்கு மாறாக ஒட்டு மொத்த ஈரானே ஓரணியில் திரண்டது. அரை மணி நேரத்தில் இஸ்ரேல் மட்டுமின்றி பதினான்கு இராணுவத் தளங்கள் மீது ஈரானிய ஏவுகணைகள் பாய்ந்தன. அதே சமயம் இப்போது நெதன்யாஹு காணாமல் போய்விட, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இஸ்ரேலில்தான் சூடு பிடித்திருக்க, இஸ்ரேலில்தான் ஆட்சி மாற்றம் நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.  

இதே நிலைமை தான் அமெரிக்காவிலும். டிரம்புக்கு எதிரான குரல்கள் ஓங்கத் தொடங்கியுள்ளன. மூத்த அதிகாரி ஒருவர் பதவி விலகியிருக்கின்றார். டிரம்பின் மகா தவறுகளை அம்பலப்படுத்தி வருகின்றார். மக்கள் மத்தியில் டிரம்பின் செல்வாக்கும் மிகப் பெரும் அளவில் சரிந்து விட்டது. அமெரிக்காவிலும் ஆட்சி மாற்றம் நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. 

2. ஈரானை ஒடுக்கிவிட்டால், மண்டியிட வைத்துவிட்டால் மத்தியக் கிழக்கிலும் ஒட்டுமொத்த உலகத்திலும் தனிப் பெரும் ஆதிக்க சக்தியாக ஓங்கி நிற்கலாம் என்று டிரம்ப் ஆசைப்பட்டார். ஆனால் இப்போது காலங்காலமாக அமெரிக்காவின் செல்ல நாய்க் குட்டியாக உடன் வந்த பிரிட்டனே அமெரிக்காவைக் கை கழுவிட்டது. NATO என்கிற மிகப் பெரும் இராணுவ சக்தியும் அமெரிக்காவை ஆதரிக்க முன் வரவில்லை. மத்தியக் கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கும் ஆதிக்கமும் ஒரே நாளில் கேள்விக் குறியாகிவிட்டது.

3. மத்தியக் கிழக்கில் மட்டுமின்றி உலக அரங்கிலும் அமெரிக்கா மதிப்பிழந்து நிற்கின்றது. இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாடும் அதன் பேச்சைக் கேட்பதற்கு ஆயத்தமாகவில்லை.

4. ஈரான் ஒடுங்கி விடும். சரணடைந்து விடும் என்றெல்லாம் டிரம்பு கணக்குப் போட்டார். இதுவும் தப்புக் கணக்காகி விட்டது. ஈரான் நாளுக்கு நாள் மிகப் பெரும் அரசியல், இராணுவ சக்தியாக வளர்ந்தோங்கிக கொண்டிருக்கின்றது.

5. கமேனியைத் தொடர்ந்து அலீ லாரி ஜானி, இஸ்மாயில் காதிப், குலாம் ரஜா சுலைமானி என்று அடுத்தடுத்து ஈரானிய தலைவர்களைக் கொன்று வருகின்றது இஸ்ரேல். இதனால் ஈரானிய அரசாங்கத்தின் செல்வாக்கு சரிந்து விடும் என்று அது நினைத்தது. ஆனால் இந்தத் தலைவர்களின் உயிர்த்தியாகம் சாமானியர்களைச் சிலிர்த்தெழச் செய்திருக்கின்றது. ஒருங்கிணைத்திருக்கின்றது.

அது மட்டுமின்றி, ஆளுமைகளின் இழப்பால் ஈரான் துவண்டு விடவில்லை. உடனுக்குடன் தகுதி வாய்ந்த, ஆற்றல் மிக்க ஆளுமைகளைக் கொண்டு ஈரான் துடிப்புடன் இயங்கி வருகின்றது. தற்போது கூட அலீ லாரிஜானி இடத்தில் பொறுப்பேற்றுள்ள சயீத் ஜலீலி பொலிட்டிகல் சைன்சில் டாக்டரேட் பட்டம் பெற்றவர். போர் அனுபவமும் கொண்டவர். ஈராக்குடனான போரில் வலது பாதத்தை இழந்தவர். நாற்பது ஆண்டுகளாய் பல்வேறு தளங்களில் இடைவிடாமல் இயங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்தத்தில் ஆக்கிரமிப்பு இஸ்ரேலை ஆதரித்து அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் இராணுவ பலத்தை அழித்து வருகிறார் டொனால்ட் டிரம்ப். இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்ற மாபெரும் பெருமையும் டொனால்ட் டிரம்ப்பையே சாரும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!