மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் மட்டுமல்ல… தினந்தோறும் வந்து செல்லும் அரசு அதிகாரிகள், பணியாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் விபரீதம் நிகழும் முன் பாதுகாப்பு வேலி அமைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை
ராமநாதபுரத்தில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாகவே பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உயர்மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்க வருகை தருகின்றனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால், தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்களது அலுவல் தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். அரசு அதிகாரிகள், அலுவலகப் பணியாளர்கள் எனப் பலரும் இந்தப் பகுதியைத் தங்களது அன்றாடப் பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், நிழலுக்காக அவ்வப்போது பொதுமக்கள் அமரக்கூடிய இடமாகவும் இருப்பதால் பொதுமக்கள் கைக்கு எட்டும் தூரத்தில் உயர்மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளதுடன், அதைச் சுற்றி முறையான பாதுகாப்பு வேலியும் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏதேனும் எதிர்பாராத விதமாக மின்விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய முக்கிய இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவே இத்தகைய ஆபத்து நீடிப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், மனவேதனையுடன் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் சிலர் விபரீத முடிவுகளை எடுக்க முயலும் சூழல் ஏற்பட்டால், அருகிலேயே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் இந்த உயர்மின் அழுத்த டிரான்ஸ்பார்மர் கூடுதல் ஆபத்தை உருவாக்கிவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு நேரில் ஆய்வு செய்து, மின்வாரிய அதிகாரிகள் மூலம் டிரான்ஸ்பார்மரைச் சுற்றி உறுதியான இரும்புக் கம்பி பாதுகாப்பு வேலி அமைக்கவும், எச்சரிக்கைப் பலகைகள் பொருத்தவும், பொதுமக்கள் நெருங்க முடியாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



You must be logged in to post a comment.