28 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மகரந்தம் தொலைத்த மலர்களும்..!தேனை பருகாத வண்ணத்து பூச்சிகளும்..!

மகரந்தம் தொலைத்த மலர்களும்..!தேனை பருகாத வண்ணத்து பூச்சிகளும்..!

எழுதியவர்: Askar November 28, 2026, 12:56 pm

மகரந்தம் தொலைத்த மலர்களும்..!தேனை பருகாத வண்ணத்து பூச்சிகளும்..! (முதல் பாகம்)

நில்…கவனி… துவங்கு…! (இரண்டாம் பாகம்)

இந்த தொடர்… உங்கள் வாழ்க்கை முறையில் (Life style) ஏதாவது ஒரு புள்ளியை மாற்றலாம்!

மகரந்த மலர் – 4

பொதுவாக, மனம் என்பது மிகவும் மென்மையானது. ஒரு மயிலிறகால் மெதுவாக வருடினால்கூட, சில நேரங்களில் அதில் கீறல் விழுந்துவிடும்.

அப்படியிருக்கும்போது, கடுமையான சொற்களும், அலட்சியமான பார்வைகளும், புரிந்து கொள்ளப்படாத உணர்வுகளும் ஒரு மனதை எவ்வளவு ஆழமாகக் காயப்படுத்தும்?

பெண்கள் கண்ணாடி போன்றவர்கள். அவர்களை மிகுந்த கவனத்துடனும் மென்மையுடனும் கையாள வேண்டும் என்று இஸ்லாமிய வாழ்வியல் நெறி உணர்த்துகிறது.

கணவன் – மனைவி உறவு என்பது வெறுமனே ஒரே வீட்டில் வசிப்பதோ, ஒரே கூரையின் கீழ் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதோ அல்ல.

அது… ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது! ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்வது!

ஒருவரை ஒருவர் மன்னிப்பது! ஒருவருடைய குறைகளைவிட நிறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது!

ஒருவருடைய பலவீனங்களை பலர் முன்னிலையில் வெளிப்படுத்தாமல்தனிமையில் அன்போடு எடுத்துச் சொல்வது!

ஒருவரிடம் நூறு குறைகளைக் கண்டாலும், அவரிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல குணத்திற்காக கூட அவரை நேசிக்கக் கற்றுக்கொள்வது!

இதுதான் இல்லற வாழ்க்கையின் அடிப்படை!

வாழ்க்கை என்பது எப்போதும் கனவுகளில் மிதப்பதல்ல. அது எப்போதும் ஜிகினாக்களைப் போல மின்னிக் கொண்டிருப்பது மல்ல.

சில நேரங்களில் வாழ்க்கை வலிகள் நிறைந்ததாக இருக்கும்.

சில நேரங்களில் உறவுகளே சுமையாகத் தோன்றலாம்.

எதிர்பார்த்தது கிடைக்காமல் போகலாம். நினைத்தது நடக்காமல் போகலாம்.

அன்பாகப் பேசியவர்கள் அலட்சியப் படுத்தலாம்.

உதவுவார்கள் என்று நம்பியவர்கள் கைவிட்டுச் செல்லலாம்.

ஆனால், அதற்காக வாழ்க்கையே கசந்துவிட்டதாக முடிவெடுத்துவிட முடியுமா?

வாழ்க்கை எப்போதும் இனிப்பாகவும் இருப்பதில்லை.

அதே நேரத்தில், அது எப்போதும் கசப்பாகவும் இருப்பதில்லை.

மகிழ்ச்சியும் துயரமும் மாறிமாறி வருவதுதான் வாழ்க்கை!

அந்த எதார்த்தத்தை புரிந்துகொண்டு, வருகின்ற சோதனைகளை ஒருவருக்கொருவர் துணையாக நின்று எதிர்கொள்வதில்தான் இல்லறத்தின் உண்மையான அழகு இருக்கிறது.

ஆனால், இந்த அடிப்படை வாழ்க்கை பாடத்தைத்தான் இன்றைய தலைமுறை யினருக்கு யாரும் முறையாகக் கற்றுக் கொடுப்பதில்லை.

குறிப்பாக, புதிதாகத் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் தம்பதியருக்கு,

வாழ்க்கையின் எதார்த்தங் களையும் குடும்ப உறவுகளின் நுட்பங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.

கல்வி என்பது வேலைக்கு செல்வதற்கும், பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கும் மட்டுமல்ல.

ஒரு குடும்பத்தை அன்போடு நடத்துவதற்கும், உறவுகளைக் கையாள்வதற்கும், ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்வதற்கும்,

கருத்து வேறுபாடுகளைப் புரிதலோடு தீர்த்துக் கொள்வதற்கும்கூட வாழ்க்கைக் கல்வி தேவை!

ரேஷ்மாவைப் பொறுத்தவரை, ஆரம்பத்தில் ஒரு Pizza வாங்க வேண்டும் என்ற ஆசையாகத்தான் இருந்தது.

பிறகு, அந்த ஆசை மெல்ல மெல்ல வற்புறுத்தலாக மாறியது.

இப்போது, வாங்கியே ஆக வேண்டும் என்ற பிடிவாதமான மனநிலைக்கு வந்துவிட்டது.

ஒரு சிறிய ஆசை நிறைவேறாத போது ஏமாற்றம் ஏற்படலாம்.

அந்த ஏமாற்றத்தை புரிந்து கொள்ளாமல் மனதிற்குள் வளர்த்துக் கொண்டால், அது பிடிவாதமாக மாறலாம்.

பிடிவாதம் தொடர்ந்தால் மனக்கசப்பு உருவாகலாம்.

அந்த மனக்கசப்பு கணவன் மீதான வெறுப்பாக மாறினால்?

இன்று ஒரு Pizza வாங்குவதில் தொடங்கிய பிரச்சினை, நாளை கணவன் தன்னுடைய ஆசைகளுக்கோ உணர்வுகளுக்கோ மதிப்பளிப்பது இல்லை என்ற எண்ணத்தை உருவாக்கலாம்.

அந்த எண்ணம் நாளடைவில் இருவருக்கு மிடையே இடைவெளியை ஏற்படுத்தலாம்.

இறுதியில், சிறிய விஷயங்களில் தொடங்கிய மனக்கசப்புகள் பெரிய பிரச்சினைகளாக உருவெடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆனால், ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது Pizza வாங்கிக் கொடுக்காதது மட்டுமே ஒரு திருமண உறவை முறித்துவிடும் என்று சொல்லிவிட முடியாது.

அதற்குப் பின்னால் இருக்கும் உணர்வுகளையும், நீண்டகால மனக்கசப் புகளையும்,

இருவருக்கு மிடையே ஏற்கெனவே உருவாகியிருக்கும் புரிதலின் மையையும் ஆராய வேண்டியிருக் கிறது.

இன்றைய தலாக்குகளுக்கு பின்னாலும் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

அவற்றில் தம்பதியருக்கு இடையேயான புரிதலின்மை,

எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் ஏற்படும் ஏமாற்றங்கள், முறையான உரையாடல்கள் இல்லாமை,

போன்றவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கணவன் என்ன நினைக்கிறார் என்பதை மனைவி புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை.

மனைவி எதற்காக வருத்தப்படுகிறார் என்பதை கணவன் கேட்டறிய முற்படுவதில்லை.

இருவரும் தங்களுடைய தரப்பை மட்டுமே நியாயப்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால், எதிரிலிருப்பவரின் மனதிற்குள் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முயற்சிப்பதில்லை.

அங்கேதான் பிரச்சினைகள் முளைவிடத் தொடங்குகின்றன.

வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் வருவது பிரச்சினையல்ல.

அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாத நிலைதான் உண்மையான பிரச்சினை!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்றைய காட்சி ஊடகங்களின் தாக்கத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக் கிறது.

ஒரு காலத்தில் தொலைக்காட்சி தொடர்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றிப் பல கற்பனைகளை உருவாக்கின.

இன்று அந்த இடத்தை சினிமாக்களும், Instagram Reels-களும், சமூக வலைத் தளங்களில் உலவும் ஆடம்பர வாழ்க்கைக் காட்சிகளும் பெருமளவில் ஆக்கிரமித்திருக் கின்றன.

ஒருவர் வெளிநாட்டில் கணவருடன் மகிழ்ச்சியாகச் சுற்றுகிறார்.

இன்னொருவர் விலையுயர்ந்த உணவகத்தில் விதவிதமான உணவுகளைச் சாப்பிடுகிறார்.

மற்றொருவர் கணவர் வாங்கிக்கொடுத்த விலையுயர்ந்த பரிசுகளைப் பெருமையாகப் பதிவிடுகிறார்.

இன்னொருவர் தங்களுடைய திருமண நாளைக் கொண்டாட லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்.

இவற்றை யெல்லாம் பார்க்கும் சிலருடைய மனங்களில் மெல்ல ஒரு கேள்வி எழுகிறது.

அவர்கள் வாழ்க்கை மட்டும் இவ்வளவு அழகாக இருக்கிறதே… நம் வாழ்க்கையும் ஏன் அப்படி இருக்கக்கூடாது?

ஆசைப்படுவதில் தவறில்லை. நல்ல வாழ்க்கையை விரும்புவதிலும் தவறில்லை.

ஆனால், மற்றவர்களின் வாழ்க்கையில் வெளிப்படும் சில நிமிடக் காட்சிகளைப் பார்த்துவிட்டு,

அவர்களுடைய முழு வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்று நம்புவதில்தான் சிக்கல் இருக்கிறது.

ஒரு Reels-ல் தெரியும் புன்னகைக்குப் பின்னால் இருக்கும் கவலைகள் நமக்குத் தெரியாது.

ஒரு புகைப்படத்தில் தெரியும் ஆடம்பரத்திற்குப் பின்னால் இருக்கும் கடன்கள் நமக்குத் தெரியாது.

ஒரு தம்பதியர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்கு பின்னால் அவர்கள் கடந்து வந்த போராட்டங்களும் நமக்குத் தெரியாது.

ஆனால், நாம் பார்ப்பதோ அந்த அழகான காட்சிகளை மட்டும்தான்!

அந்தக் காட்சிகளோடு நம்முடைய வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்குகிறோம்.

அந்த ஒப்பீடு நம்மிடம் இருப்பவற்றின் மதிப்பைக் குறைத்து விடுகிறது.

நம்மிடம் இல்லாதவற்றின் மீதான ஆசையை அதிகப் படுத்துகிறது.

இறுதியில், நம்முடைய வாழ்க்கை நன்றாக இருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

ஊடகங்கள் காட்டும் வாழ்க்கையின் பின்னணியைப் புரிந்துகொண்டு,

தங்களுடைய பொருளாதார நிலைமைக்கும் குடும்பச் சூழலுக்கும் ஏற்றவாறு வாழக் கற்றுக்கொள்ளும் குடும்பங்கள் இந்தச் சிக்கல்களைக் கடந்து செல்கின்றன.

ஆனால், ஒப்பீடுகளுக்கும் அளவுக்கு மீறிய எதிர்பார்ப் புகளுக்கும் அடிமையாகி விடுபவர்கள், தங்களிடம் இருக்கும் மகிழ்ச்சியைக்கூட உணராமல் தவிக்கிறார்கள்.

இப்போது மீண்டும் ரேஷ்மாவைப் பாருங்கள்.

அவளும் படித்தவள்தான். அவளுக்குப் புரியாத விஷயங்கள் என்று பெரிதாக எதுவுமில்லை.

ஆனால், படித்திருப்பதற்கும் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது.

கல்வி அறிவைத் தரலாம். ஆனால், அந்த அறிவை அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவது என்பதை அனுபவமும் புரிதலும்தான் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ரேஷ்மாவிடம் அந்தப் புரிதல் இன்னும் முழுமையாக வளரவில்லை என்றுதான் தோன்றுகிறது.

அவளுடைய ஆசை தவறா? இல்லை! அவளுடைய ஆசையைப் புரிந்து கொள்ளாமல் கணவன் மறுப்பது சரியா?

அதுவும் அவனுடைய சூழ்நிலையைப் பொறுத்தது.

அப்படியானால், பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

ஆசைகளை அன்போடு பேச வேண்டும். மறுப்புகளை மரியாதையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதாரச் சூழலை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

ஒருவருடைய உணர்வுகளை இன்னொருவர் அலட்சியப் படுத்தக் கூடாது. இருவரும் தங்களுடைய பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு, எதிரிலிருப்பவரின் மனநிலையையும் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஏனெனில், திருமண வாழ்க்கையில் வெற்றி என்பது யார் தங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதில் இல்லை.

இருவரும் இணைந்து, ஒருவருடைய மகிழ்ச்சிக்காக இன்னொருவர் எவ்வளவு தூரம் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

ரேஷ்மாவிற்கு வாழ்க்கையை எப்படிப் புரியவைப்பது?

அவளுடைய ஆசைகளை அடக்குவதன் மூலமா? அவளுடைய பிடிவாதத்தை விமர்சிப்பதன் மூலமா?

அல்லது… அவளுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வாழ்க்கையின் எதார்த்தங்களை அன்போடு எடுத்துச் சொல்வதன் மூலமா? பதில் நம்மிடம்தான் இருக்கிறது! ஏனெனில், மனதைப் புண்படுத்துவது எளிது.

ஆனால், புண்பட்ட மனதைப் புரிந்துகொண்டு ஆற்றுப் படுத்துவதற்குத்தான் அதிக அன்பும் பொறுமையும் தேவை! ரேஷ்மாவும் ஒருநாள் இதைப் புரிந்துகொள்ளலாம்.

அவளுடைய மனதில் உருவாகியிருக்கும் பிடிவாத மேகங்கள் விலகி, வாழ்க்கையின் உண்மையான வானம் தெரியத் தொடங்கும் என்று எதிர்பார்ப்போம்.

மகரந்தத்தை இழந்த மலர்களும் மீண்டும் மணம் வீசலாம்.

தேனைப் பருகாத வண்ணத்துப் பூச்சிகளும் மீண்டும் சிறகடித்துப் பறக்கலாம்.

அதற்குத் தேவை… கொஞ்சம் புரிதல்… கொஞ்சம் பொறுமை… நிறைய அன்பு!

வண்ணத்துப் பூச்சிகள் நாளையும் பறக்கும்..!

கப்ளிசேட்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!