20 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திருப்பரங்குன்றம் தூணில் ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்: பிறப்பித்த முக்கிய நிபந்தனைகள் என்னென்ன!! 

திருப்பரங்குன்றம் தூணில் ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம்: பிறப்பித்த முக்கிய நிபந்தனைகள் என்னென்ன!! 

எழுதியவர்: Askar November 20, 2026, 4:01 pm

திருப்பரங்குன்றம் மலைமீதிருக்கும் தூணில் கார்த்திகை தீபத்தன்று ஒரே ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோடு, பல்வேறு முக்கிய நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், மிகக் கவனத்துடன் பல்வேறு நிபந்தனைகளையும், இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, இந்த வழக்குத் தொடர்பான முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்ய ஆறு வார கால அவகாசத்தையும் வழங்கி நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இன்று உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு, 10 நிமிடங்கள் வரை, நீதிபதிகள் பல்வேறு கருத்துகளை முன் வைத்திருந்தனர். அதில்,

இந்த வழக்கு, ஒரு மத ரீதியான விவகாரம் என்பதால், இதில் நீதிமன்றம் எந்த அளவுக்கு தலையிடலாம் என்பது குறித்து ஆலோசித்திருக்கிறோம்.

இந்த தீர்ப்பை ஒரு முன்மாதிரி வழக்காக எடுத்துக் கொண்டு வேறு எந்த வழக்கிலும் தீர்ப்புகளை வெளியிட்டுவிடக் கூடாது என்று பதிவு செய்கிறோம்.

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புடன் இந்த வழக்கை ஒப்பிட்டுப் பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நினைக்கிறோம் என அடிக்கோலிட்டுக் காண்பித்திருக்கிறார்கள்.

இன்று பிறப்பிக்கும் இடைக்கால உத்தரவு, வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு கால அவகாசம் ஆகும்பட்சத்தில், தன்னிச்சையாக அடுத்த ஆண்டும் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்பது கருத்தில் கொள்ளப்படும் என்பதால், இந்த ஆண்டு கார்த்திகை தீபம் அன்று ஒரே ஒரு நாள் மட்டுமே தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் இணைந்து, யார் யார் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படலாம் என்பதை உறுதி செய்ய வேண்டும், இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விளக்கு ஏற்றும் இடத்துக்கு செல்ல வேண்டும். வேறு யாரும் அங்கே செல்லக் கூடாது என்ற முக்கிய நிபந்தனையை விதித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல், திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க வேண்டும். இவர்களை மதுரை மாவட்ட ஆட்சியரே தேர்வு செய்வார்.

வரும் கார்த்திகைத் தீபத் திருநாள் அன்று மட்டும் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது முழுக்க முழுக்க இடைக்காலத் தீர்ப்பு.

சிஆர்பிஎஃப் வீரர்களைக்கூட பாதுகாப்புக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தூண் அருகே கோஷம் எழுப்பவோ, கும்பல் கூடவோ கூடாது.

மக்கள் யாரும் தீபம் ஏற்றும்போது தூண் பகுதிக்கு செல்லவே கூடாது.

அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தூண் பகுதிக்குச் செல்ல வேண்டும். வேறு யாரும் அனுமதி கிடையாது.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கார்த்திகைத் தீபத் திருநாள் அன்று ஒரு ஒரே முறை மட்டும் துணில் தீபம் ஏற்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

கார்த்திகை அன்று தூணில் தீபம் ஏற்றும் குழுவை மதுரை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்ய வேண்டும்

இது இடைக்கால உத்தரவு மட்டுமே, தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று தீர்ப்பளிக்கப்படும்.

தீர்ப்பளிக்க கால அவகாசம் ஆகும் பட்சத்தில், அடுத்த ஆண்டுக்கு இந்த உத்தரவு பொருந்தாது, இந்த ஒரே ஒரு கார்த்திகை தீபத்துக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!